அன்பு வாசகர்களே!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஆனந்தசந்திரிகை 03-17-2019 இதழில்
தலையங்கம்: “வசந்ததின் ஆரம்பத்தில், முதலில் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், போர் வீரர்கள் மரணம். அதற்கடுத்து எத்தியோபியன் விமான விபத்து, அதையடுத்து பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றிப் பலத்காரம், அதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் மசூதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் எல்லா இடங்களில் இருந்தும் அவலக் குரலும், அழுகைக் குரலும் கேட்டாகிவிட்டது” என்று வருந்துகிறார் ஆசிரியர்.
உன்னை நம்பித்தானே வந்தேன்: உன்னை நம்பித்தானே வந்தேன் என்று அந்த பெண் கதறும் சத்தம் குளவியாய் என் காதுக்குள் இன்னும் குடைந்து கொண்டிருக்கிறது, என்று ஆரம்பித்து பொள்ளாச்சி சம்பவத்தை எண்ணிப் பொறுமுகிறார் கவிஞர் வீரா.
வாழும் கலை: ஆரோக்கியம் என்பது மனது சம்பந்தப்பட்டது. மனதில் கோபம், வேதனை போன்றவை தோன்றும் போது உடல் நலம் கெடுகிறது. இன்னா செய்தாரை மன்னித்தல் அவருக்கு உதவுவதை விட உன் உடல் நலம் காக்கிறது என்று அழகாக ஒரு சிறு கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரன்.
நான் என்றால்: என்ற கவிதையில் கவிதா.அ.கோ தன்னைத் தானே ஒரு ஆத்ம பரிசோதனை செய்கிறார். இப் பரிசோதனை அவருக்கு மட்டுமல்ல உங்களையும் கேட்க வைக்கும் “நான் யார்” என்று?
ஈராக் போர்முனையில்: “இரு பெண்கள் உட்பட அமெரிக்க நிறுவனம் சார்பாக பலர்பணியில் இருந்தனர். சன்னி நூறு கிலோ எடையுள்ள நல்ல உயரமான, குண்டான பெண். ஜெசிக்கா ஒல்லியான, குள்ளமான உடல்வாகு கொண்டவள். இருவரும் கறுப்பிகள். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு. ஜெசிக்காவிற்கு, மார்கல், மல்லிக் என இருமகன்கள். திருமணத்தில் விருப்பமில்லை. குழந்தை தேவைப்பட்டது, பெற்றுக் கொண்டோம் என்றார்கள்” என்ற அமெரிக்கர்கள் கேட்டு வியப்பது நமது கலாச்சாரம் என்கிறார் ஷாகுல்.
திருமணம் டும் டும் டும்: “அவள் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்லப் போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் அது மாற்றம். அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழாதான் திருமணம்” என்கிறார் இக்கதையில் கேயென்னார்.
பூகம்பம்: இயற்கையே பெரிது என்று நினைவு படுத்தும் கேயென்னரின் கவிதை.
திரைவிமர்சனம்-கோலமாவு கோகிலா: திரைப்படத்தை மட்டுமல்ல நயன்தாராவையும் பாராட்டித் தள்ளிவிட்டார் இப்பட விமர்சனத்தில் ஆசிரியை திருமதி. லோகமாதேவி. அத்தனை பாராட்டுதல்களும் உண்மை.
மக்களால் மக்களுக்காக: ““வீட்டினிலே பெண்களைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்” என்று ஏளனம் செய்த நாம், இன்று விட்டில் பூச்சிகளாக வெளியே வந்து சுதந்திரமாகத் திரியும் பெண்களை பாதுகாக்கத் தவறி விட்டோம். ஆண்களைப் பலசாலியாகவும், வீரனாகவும், வளர்க்க விரும்பும் நாம் பெண்களை நளினமானவர்களாகவும், ஆண்களைச் சார்ந்தவர்களாகவும் வளர்க்கிறோம். முதலில் ஆணுக்குப் பெண் நிகர் என்று சொல்லும் நாம் அவர்களை நிகரானவர்களாக வளர்க்கத் தவறி விட்டோம்” என்று சாடுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
மழலை மணித்துளிகள்: சுத்தும் ராட்டினத்தில் ஆரம்பித்து ஐவகை நிலங்களையும் முயல் போல் துள்ளிக் குதித்து வந்து சுற்றிக் காட்டுகிறார் கவிஞர் மணிமீ. எல்லோரும் சேர்ந்து சுற்றலாம்
பச்சை நிறமே…பச்சை நிறமே: குடுவையில் தோட்டமா? எவ்வளவு எளிது என்று விளக்குகிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி. நீங்களும் ஒரு குடுவைத் தோட்டம் தொடங்கலாமே?
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்… தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.