அன்பு வாசகர்களே !!!
வணக்கம். வாசகர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துக்கள்.
ஆனந்தசந்திரிகை 03-31-2019 இதழில் …
∙ தலையங்கம்: இந்தியாவின் சமீபத்திய கொண்டாட்டம், “மிஷன் சக்தி”. அதே வேளையில் நமது வாசகர்கள் கொண்டாட, ஆனந்தசந்திரிகையின் அடுத்த இதழ் ஆண்டுமலராக வெளிவர உள்ளது என்று மேலும் விவரங்களைப் பகிர்கிறார் தலையங்கத்தில் ஆசிரியர்.
∙ இயற்கையோடு இயற்பியல்: பள்ளி ஆசிரியர், கவிதையின் ஆசிரியராகும் போது இயற்கையும், இயற்பியலும் இணையத்தானே செய்யும். அழகாய் இணைக்கும் கவிதையில் ந. வீரா.
∙ வாழும் கலை: ஒரு ஆசிரியரின் பணி பாடம் சொல்லிக் கொடுப்பதோடு முடிந்து விடுவதில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது என்பதை அழகான கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
∙ காத்திருப்பு: எவருக்கும் காத்திருப்பது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் வாழ்வில் எத்தனை விதமான காத்திருப்புக்கள் இருக்கின்றன என்று வரிசைப் படுத்துகிறார் ஆசிரியர் கேயென்னார்.
∙ வியர்வை நோட்டுக்கள்: உழைப்பின் உயர்வைக் காட்டுவது வியர்வை, அவர் தன் அப்பாவின் உழைப்பை உணர்வதைப் படிக்கும்போது கண்ணீர் துளிர்க்க வைக்கும் கவிதாவின் கவிதை.
∙ ஈராக் போர்முனையில்: ஓடிஸ் “ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ். முதலில் நான் நல்ல செய்தியைச் சொல்கிறேன். எட்டு மாதங்களுக்குப் பின் என் குழந்தையை நான் பார்த்தேன் சந்தோஷமான நாள் அது”. குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பும், தந்தையை அடையாளம் கண்டு கொண்டு கைகளை உயர்த்தித் தூக்கச் சொன்னதையும், குழந்தையுடன் குழந்தையாகவே மாறி அவன் விளையாடி மகிழ்ந்ததையும், குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சொல்லிச் சிரித்தான். ஆனால் அவன் சொன்ன பேட் நியூஸ் என்ன என்பதைப் படிக்க அழைக்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
∙ வலி: பட்டினிப் போரால் துவண்டு, அதன் விளைவாய் கலங்க எத்தனிக்கும் தன் கருவிழிகள் இரண்டைக் கட்டுக்குள் அடக்கி, “என் பசி போக்க வரமொன்றைத் தாரும்” என்பதைப் போல், தன் கரம்தனைப் பக்கவாட்டுக் கதவெதிரில் அவன் ஏந்தினான் ஆயினும், நின்றிருந்த வண்டியோ நிமிஷத்தில் காணாமற்போனது – என்று ஏழ்மையின் வலியை விளக்குகிறார் ஆசிரியர் கேயென்னார்.
∙ திரை விமர்சனம்: “துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கறுப்பினப் பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பைக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும், ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யப்பட்ட ஷர்லியை காவலர்களிடமிருந்து மீட்பதும்” போன்ற காட்சிகளை விவரிக்கும் போது ஒரு சரித்திர மாற்றத்தைக் காட்டுகிறார் திருமதி. லோகமாதேவி.
∙ மக்களால், மக்களுக்காக: இந்தியாவின் “மிஷன் சக்தியை” பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
∙ கடலுக்கு அப்பாலும் கன்னித் தமிழ்: சிங்கப்பூரில் நடக்கும் தமிழ் விழாவினை அங்கிருந்து நமது பத்திரிகைக்கு எழுதி அனுப்பியுள்ளார் திருமதி. செளந்தர நாயகி வயிரவன்.
∙ மழலை மழைத்துளிகள்: தலையை ஆட்டும் கோழி, வாலை ஆட்டும் நாய்க்குட்டி இவைகளுடன் காலை ஆட்டி உடற்பயிற்சியும் செய்யச் சொல்லுகிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.
∙ பச்சை நிறமே…: “தொட்டாற்சிணுங்கி” செடியை நான் அனைவரும் தொட்டுப் பார்த்து இருக்கிறோம். ஏன் சிணுங்குகிறது எனப் படித்துப் பார்க்க அழைக்கிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
Please join us in our Whats-App group using this link: https://chat.whatsapp.com/KX8xYcqvLTaDn7NTc4J0S3