அன்பு வாசகர்களே!!!
வணக்கம். இனிய ஞாயிறு தின வாழ்த்துக்கள்.
ஆனந்தசந்திரிகை 05-05-2019 இதழில் …
தலையங்கம்: அன்னையர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று கொண்டாடும் அதே வேளையில் ஈஸ்தர் தினத்தன்று ஈழத்தில் நடந்த பயங்கரவாதத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இழந்த உயிர்களில் தமிழரும் உண்டு. இழப்பைச் சந்தித்தவர்களுக்கு ஆனந்தசந்திரிகையின் சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் கலந்து எழுதியுள்ளார் ஆசிரியர்.
தாய்: அன்னையர் தினத்திற்கு கவிதாவின் ஒரு வாழ்த்துக் கவிதை கவிதை.
கம்பன் கவிநயம்: ஆண்டு மலரிலிருந்து தொடங்கிய ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின் புதிய தொடர் கதையும் சொல்லுகிறது, கம்பனின் கவிதையையும் விளக்குகிறது.
பள்ளி விடுமுறை: விடுமுறை சந்தோஷம்தான் மாணவர்களுக்கு ஆனால் பள்ளிக்கு? நா.வீரா கவிதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அலைவன்: இராம்கி எழுதும் இந்த இதழிலிருந்து தொடங்கும் புதிய தொடர்கதை,தொழில்நுட்பம் நிறைந்த எதிர்கால வாழ்வியலை விளக்கும் நாவல்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்: வாட்ஸ்-அப்பில் வந்த வாழ்த்துக் கவிதையும், கேயென்னாரின் வாழ்த்துக் கவிதையும் வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துரைக்கின்றன.
ஈராக் போர்முனையில்: “தொடர்ந்து வரும் நாட்களில் நாங்கள் உணவில்லாமல் சிரமப்படப் போகிறோம் என யாருக்கும் தெரியவில்லை. சாலைகளில் தொடர்ந்து பல பாதுகாப்பு மிகுந்த கான்வாய்கள் தாக்கப்பட்டதால், சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. உணவுக் கூடத்திற்கான உணவுப்பொருட்கள் ஒரு வாரத்திற்கு மேல் வரவில்லை என்றாலே சமாளிப்பது கடினம். அப்போது ஒரு வாரத்திற்கு மேலாகியும் வாகனங்கள் வரவில்லை. போக்குவரத்து எப்போது சீராகும் என யாராலும் கணிக்க இயலவில்லை. காலை, மாலை, இரவில் வழங்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை முதலில் குறைக்கப்பட்டது.” என்று போர்க்கால உணவு பற்றாக்குறையை விளக்குகிறார் ஆசிரியர் ஷாகுல்.
நண்பன்: ஐ.டி துறையில் பதிவு உயர்வு எப்படிப் பெறுவதென்று கதைமூலம் விளக்குகிறார் ஆசிரியர் கேயென்னார்.
திரை விமர்சனம்-பேரன்பு: “ஒரு சிறப்புப் பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படிக் கஷ்டப்படுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாகத் தீர்க்க வேண்டிய ஒன்றெனக் காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.” என்று பேரன்பு திரைப்படத்தின் இயக்குநரைச் சாடுகிறார் திருமதி. லோகமாதேவி.
மக்களால், மக்களுக்காக: ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளரால் இவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வர முடியுமானால், இந்தியா முழுவதும் கலவரமில்லாத, லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு நாடாக மாற வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது. அதற்கு ஒவ்வொரு ஆட்சியாளரும் திரு. மீர் முகமது அலி போல் சிந்திக்க வேண்டும். அவரைப் போல் செயல் பட வேண்டும். அவருடைய சீரிய சிந்தனை நாட்டிற்கு மேலும் நன்மைகளைத் தரும் என்று பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
மழலை மழைத்துளிகள்: கிளி, குருவி, மயில், அணில் என்று குழந்தைகளுக்காக எழுதப் பட்ட கவிதையால், நாம் எல்லோரையும் குழந்தையாக்கிவிடுகிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.
பச்சை நிறமே…: “காற்று மண் மற்றும் நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை கிரகித்துக்கொள்ளும். எனவே விதைகளிலும் தாவர பாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும் தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளைச் சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ, அல்லது ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதை உறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்” என்று டெக்ஸஸின் மாநில மலரைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.