அன்பு வாசகர்களே!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தலையங்கம்: “ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாம் எப்போதும் சிறப்பு ஆண்டுமலர் வெளியிடுவோம். இவ்வாண்டும் அமோகமாக அச்சில் வெளிவருகிறது. மின்னிதழ் ஏப்ரல் 15ம் தேதி வெளிவரும். அச்சுப்பிரதி அதைத் தொடர்ந்து வெளியிடப்படும். 100+ பக்கங்கள், தமிழ் நாட்டிலிருந்து தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்” என்ற ஐந்தாம் ஆண்டிற்குள் நுழையும் ஆனந்தசந்திரிகையின் ஆண்டுமலர் அறிவிப்புடன் புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கிறார் ஆசிரியர்.
வாழும் கலை: “நேரமே இல்லை” என்று சொல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. நேரப் பராமரிப்பு (Time management) எல்லா வயதினரும், எல்லா காலத்திலும் கடைப் பிடிக்க வேண்டியது. எப்படி? என்பதை அழகாக ஒரு கதையின்மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரன்.
விடியுமா? இருளுமா?: என்ற கவிதையில் கவிதா கேட்கும் உழவர்களுக்கான இக்கேள்வி எல்லோரும் விடை காணத் துடிக்கும் ஒரு கேள்வி. கேள்வி மட்டும் நீண்ட காலமாகத் தொக்கி நிற்கிறது. பதில்??
ஈராக் போர்முனையில்: “ராணுவம் பீரங்கியை இயக்கும் கால அட்டவணையை உணவுக் கூடத்தின் அறிவிப்புப் பலகையில் அனைவரும் பார்க்கும் படி தொங்கவிட்டிருந்தனர். பீரங்கி வெடிக்கும்போது பெரும் சப்தம் வரும். எனவே அந்நேரத்தில் அனைவரும் தங்கள் காதுகளைப் பொத்தி பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அனைவரும் அட்டவணையில் உள்ள குண்டு வெடிக்கும் நேரத்தை நினைவில் வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டோம்.” என்று சாப்பாடுக்கானகால அட்டவணையிடுமிடத்தில் குண்டு வெடிப்பதற்கான அட்டவணையிடப் பட்டதை விளக்குகிறார் ஷாகுல்.
மரணப் போராட்டம்: மரங்களின் அவசியத்தை மரங்களில் வாயிலாகவே விளக்கும் சூழ்நிலை மேம்பாட்டுக்கு உதவும் கேயென்னாரின் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கதை.
ஜீவன்களின் சங்கமம்: உடன் வாழ்பவருடன் சேரமறுக்கும் மனித உலகில் சங்கமத்தின் சிறப்பை விளக்கும் கேயென்னாரின் கவிதை.
திரைவிமர்சனம்-96: ஆகா…ஒஹோ… என்று பாராட்ட ஒரு கூட்டம், அய்யே! என்று முகம் சுளிக்கும் இரண்டாவது கூட்டம் என்ற பிளவு பட்ட விமரிசனத்திற்கு உட்பட்ட “96” திரைப்படத்தை அவர் பாணியில் விமர்சிக்கிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி.
மக்களால் மக்களுக்காக: “தீவிரவாதிகள் நமது நாட்டு பாதுகாப்பு நிறைந்த எல்லைப் பகுதியில் அதுவும், நமது வீரர்கள் மொத்தமாக பயணிக்கும் போது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அவர்களுடைய உளவாளிகள் மூலம் நமது நாட்டின் எல்லைப் பகுதி போர் வீரர்களின் இயக்கம் தெரிந்திருக்கிறது. அவர்களின் உளவுப்படை நமது நாட்டின் உளவுத்துறையை விட நன்றாகச் செயல் பட்டுள்ளது. அவர்கள் செய்தி திரட்டுவதில் நமது நாட்டுச் செயற்கைக் கோளையையும் மிஞ்சியுள்ளார்கள். இது இன்றும் எட்டப்பர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று புல்வாமா தாக்குதலை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
மழலை மணித்துளிகள்: குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதும் போது குழந்தையாகவே மாறி விடுகிறார் நமது கவிஞர் மணிமீ. இளமைத் தமிழ், பாப்பா கச்சேரி, பூனையும் எலியும் பற்றிய அனைத்துக் கவிதைகளும் அருமை.
பச்சை நிறமே…பச்சை நிறமே: குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூக்கும். அதன் காலக்கணக்கு எப்படி நிகழ்கிறது என்று விளக்குகிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்… தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.