அன்பு வாசகர்களே !!!
வணக்கம். ஆனந்தசந்திரிகை 10-15-2018 இதழில் …
- தலையங்கம்: நவராத்திரி நல்வாழ்த்துக்களில் தொடங்கி “ஒரு மொழி (தமிழ் மொழி) முழுமையான வளர்ச்சி அடைவது என்பது எப்போது?” என்ற கேள்விக்கு சு.கி.சிவம் ஐயா அவர்களின் பதிலையும், அதன்படி ஆனந்தசந்திரிகை என்ன செய்கிறது? என்பதனையும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
- காந்தியை வணங்குவோம்: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆம் பிறந்த நாளில் அவரை வணங்கி வாழ்த்துக்கூறும் நினைவாஞ்சலி கவிதையைத் தருகிறார் கேயென்னார்.
- வாழும் கலை: இருமனம் ஒருமித்தலே திருமணம் என்பார்கள். அத்தகைய உறவை எப்படி இனம் காண்பது என்பது? இவர்களின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது சொர்க்கத்திற்கு பக்கமாய் வானவெளியில் மிதக்கும் போதா? அழகான உறவின் ஆரம்பமும் அழகாகத்தானே இருக்கும் என்பதை தன் கதையின் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
- கிருஷ்ண தேவராயர்: இன்று “மாநில சுயாட்சி” என்று கூவுகிறார்களே அதைக் கண்டுபிடித்தவரே இவர்தான். அன்றைய “சமஸ்தானம்” ஆட்சிமுறை இவர்தான் கொண்டு வந்தது தான் என்று கிருஷ்ணதேவராயரின் புகழ் பரப்புகிறார் ஆசிரியர் இராமசேஷன்.
- ஈராக் போர்முனையில்: “உள்ளே தண்ணீரில்லாத குளியலறையில் லக்ஷ்மண் குளித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துவிட்டேன். மணலால் உடல் தேய்த்தார், தண்ணீர் இல்லாமலே மீண்டும் குளித்தார். வெளியே வந்தவர் ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்த்து, தலை வாரிக்கொண்டார்” என்று போர்முனையில் உடலும் உயிரும் மட்டுமல்ல மனமும் சிதிலமடைகிறது என்று பாக்பா முகாமின் அனுபவங்களைத் தொடர்கிறார் ஆசிரியர் ஷாகுல்.
- அந்நியவாசம்: “அந்த ராமன் லட்சுமன் போல இணை பிரியாமல் இருக்க வேண்டுமென்று அவர்கள் இருவரின் தாய் தன் உயிர் பிரியும் போது கூட இதை சொல்லி விட்டு தான் போனாள். அவன் மன குமுறல் இன்னும் தீரவில்லை எப்படி தீரும் அவன் வாழும் வரை அவன் நெஞ்சை அது அரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுவரை அவன் பிதற்றல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்” ஏன் என்று தெரிந்து கொள்ளப் படியுங்கள் கேயென்னரின் இந்தக் கதையினை.
- மக்களால், மக்களுக்காக: “ஏழை மாணவர்களுக்கு மட்டுமே அரசுப் பள்ளி என்ற நிலையிருப்பதால் அவை பின்தங்கி இருகின்றன. வசதி மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிக்கு வந்தால் அவை மேம்படும். அதனால் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியம் பெறும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளியில் சேர்த்தால் அங்கு செலுத்தும் கல்விக் கட்டணத்தை அரசுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்” என்ற அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
- மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுடன் பாடிப் பழக சின்னச் சிறிய வண்ணக் கவிதைகளை வாரி வழங்கியுள்ளார் திரு. மணீமி. தமிழ் கற்கும் குழந்தைகளுக்கு கையில் கிடைத்த கற்கண்டு.
- பச்சை நிறமே…: நாம் அறியாத அறிவைத் தருவது அறிவியல், அதனை அழகு தமிழில் அள்ளித் தருகையில் கற்கள் மட்டுமல்ல கற்பவரின் கண்களிலும் ஆர்வம் பூக்கும் – திருமதி. லோகமாதேவியின் புதிய தொடர்.
குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.
Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.